சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2023-04-27 19:40 GMT

14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). கூலித்தொழிலாளி. கடந்த 5-3-2020 அன்று தனது வீட்டின் முன்பு 14 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு சென்ற கருப்பையா, அந்த சிறுமியை கடத்திச்சென்று, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சிறுமியை கடத்திச்செல்லுதல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட கருப்பையா மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து அவருக்கு இந்திய தண்டனை சட்டம் 366 பிரிவின் (பெண்ணை பலாத்காரமாக கடத்தி செல்லுதல்) கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ரூ.4 லட்சம் இழப்பீடு

அத்துடன் இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் அரசு சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்