காட்டுக்குள் 2 நாட்கள் தங்கியிருந்த கேரள வாலிபர் போலீசார் பிடித்து விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே கேரள வாலிபர் ஒருவர் 2 நாட்களாக காட்டுக்குள் தங்கியிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-03 17:07 GMT

நாட்டறம்பள்ளி அருகே கேரள வாலிபர் ஒருவர் 2 நாட்களாக காட்டுக்குள் தங்கியிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் வைத்திருந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது.

காட்டுக்குள் சென்ற வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜின்னுகா வட்டம் பகுதியில் மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் காலை வாலிபர் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரிடம் விசாரித்த போது அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

அவர் ஆராய்ச்சிக்காக வந்துள்ளதாக கூறிவிட்டு காட்டுக்குள் சென்றார். காட்டுக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி காட்டுக்குள் செல்ல வேண்டாம் என பொதுமக்கள் அவரிடம் கூறினர். அதற்கு அவர் என்னை பாதுகாத்துக் கொள்வதற்கான ஆயுதங்கள் உள்ளது எனக்கூறிவிட்டு நேற்று முன்தினம் காலை காட்டுக்குள் சென்றார். அவர் நேற்று மாலை வரை வெளியே வரவில்லை.

போலீஸ் விசாரணை

இதனால் சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் காரை வெளியே எடுக்க முடியாத வகையில் சாலையில் தண்ணீர் பேரல்களை வைத்து தடுப்புகள் அமைத்தனர். அதன் பிறகு நாட்டறம்பள்ளி போலீசாருக்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆடு மேய்க்கும் ஒருவர் கேரள வாலிபரை காட்டில் மடக்கி பிடித்து மலையடிவாரத்துக்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில், அவர் கேரளாவை சேர்ந்த முகமது நசீர் (வயது 28) என்பதும், சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு கார் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து கேரள வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்