போர் வெற்றி தூணில் இன்று வீர வணக்கம்

குளச்சல் கடற்கரையில் உள்ள போர் வெற்றி தூணில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

Update: 2023-07-29 18:45 GMT

குளச்சல், 

குளச்சல் கடற்கரையில் உள்ள போர் வெற்றி தூணில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

டச்சு படையெடுப்பு

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தபோது குளச்சல் துறைமுகம் சிறந்த வர்த்தக தலமாக விளங்கியது. இந்த துறைமுகத்தை கைப்பற்ற டச்சு படையினர் குளச்சலை நோக்கி படையெடுத்தனர். திருவிதாங்கூர் படையினருக்கும் டச்சு படையினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.

2 மாதங்கள் நடந்த இந்த சண்டையில் 1741-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி திருவிதாங்கூர் படை டச்சுபடையை வென்றது. போரின் போது கடற்கரையில் மாட்டுவண்டியில் பனை மரங்களை சாய்த்து வைத்து பெரிய பீரங்கி போன்று தோன்ற செய்து டச்சு படையினரை சரணடைய செய்ததாக செவி வழி கதைகள் கூறுகிறது.

வெற்றி தூண்

இந்த போர் வெற்றியை குறிக்கும் வகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மா குளச்சல் கடற்கரையில் போர் வெற்றித்தூணை நிறுவினார். இந்த தூண் மீது அமைந்துள்ள சங்கு சின்னம்தான் இன்று குளச்சல் நகராட்சியின் முத்திரையாக உள்ளது. போர் வெற்றி தூண் வளாகம் குளச்சல் நகராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு போர் வெற்றியை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சுவரில் போர்க்காட்சிகளை விளக்கும் புடைப்பு சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வெற்றித்தூணில் ஆண்டுதோறும் ஜூலை 31-ந் தேதி மெட்ராஸ் ரெஜிமெண்ட் 2-வது பட்டாலியன் (திருவனந்தபுரம் பாங்கோடு) ராணுவ வீரர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.

சுத்தம் செய்யும் பணி

டச்சு படையை வெற்றி பெற்று நாளை (திங்கட்கிழமை) 282-வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ராணுவ வீரர்கள் சார்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மெட்ராஸ் ரெஜிமெண்ட் 2-வது பட்டாலியன் வீரர்கள் நேற்று குளச்சலுக்கு வந்தனர். அவர்கள் போர் வெற்றித்தூணை சுத்தம் செய்து முன்னேற்பாடு பணிகளை செய்தனர். இன்று நடைபெறும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்