ஊருக்குள் புகுந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

அருமனை அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.;

Update:2022-12-10 03:00 IST

அருமனை:

அருமனை அருகே ஊருக்குள் புகுந்த யானை கூட்டத்தை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

யானை கூட்டம்

குமரி-கேரள எல்லையில் பத்துகாணி, ஆறுகாணி, சிற்றார் ஆகிய மலையோர கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியபடி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் அடர்ந்த வனம் மற்றும் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளதால் காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவுகளை தேடி அடிக்கடி கிராம பகுதிகளுக்குள் வந்து செல்கின்றன.

இதுபோக சபரிமலை சீசன் காலத்தில் வனப்பகுதியில் ஆள்நடமாட்டம் காரணமாக யானைகள் தமிழக வன பகுதிகளில் தஞ்சம் அடைவது வழக்கம். இது ஒவ்வொரு ஆண்டும் தொடர் கதையாக இருந்து வருகிறது.

ஊருக்குள் புகுந்தது

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பத்துகாணி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்துள்ளது. அங்கு தபால்நிலைய சந்திப்பில் தங்கம் என்பவருடைய வீட்டில் உள்ள தென்னை மரத்தை முறித்து தின்றது.

நள்ளிரவில் இதனை கண்ட ஊர் மக்கள் பீதி அடைந்தனர். மேலும் ஆங்காங்கே யானைகள் குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக நிற்பதை கண்டு அச்சமடைந்த அவர்கள் ஊரை விட்டு வெளியேறி பக்கத்து ஊரில் தஞ்சம் அடைந்தனர்.

வனப்பகுதிக்குள் விரட்டினர்

இந்த தகவல் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. மருதம்பாறை வனச்சரக அலுவலர்கள் யானைகளை காட்டு பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து கிளம்பி சென்றது. எனினும் மீண்டும் யானை கூட்டம் ஊருக்குள் திரும்ப வாய்ப்பு உள்ளது. எனவே 2 நாட்கள் அங்கு வனத்துறை ஊழியர்கள் முகாமிட்டு கண்காணிக்கவும் வனத்துறை உயர் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்