2-ம் நாளாக புகுந்த யானை கூட்டம்; 50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன
பூதப்பாண்டி அருகே 2-ம் நாளாக யானை கூட்டம் புகுந்து 50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே 2-ம் நாளாக யானை கூட்டம் புகுந்து 50 தென்னங்கன்றுகளை நாசம் செய்தன.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
யானை கூட்டம்
பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், விவசாயி. இவர் தாடகைமலை அடிவாரத்தில் உள்ள உடையார் கோணம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலப்பரப்பில் 1,200 வாழைகள் நட்டார். அந்த வாழை தோட்டத்துக்குள் கடந்த மாதம் புகுந்த யானை கூட்டம் 700 வாழை மரங்களை துவம்சம் செய்தன.
மீண்டும் 7-ந்தேதி யானை கூட்டம் வாழை தோட்டத்துக்குள் புகுந்து, அங்கு மீதம் இருந்த 500 வாழைகளையும், 10 தென்னை மரங்களையும் பிடுங்கி போட்டு நாசம் செய்தன.
2-ம் நாளாக புகுந்தன
இந்தநிலையில் யானை கூட்டம் நேற்று முன்தினம் 2-ம் நாளாக புகுந்தன. அவை மணிகண்டன் தோட்டத்தின் அருகே தெள்ளாந்தியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்தது.
அவை அங்கு நடப்பட்டு இருந்த 50 தென்னங்கன்றுகளை பிடுங்கி போட்டு நாசம் செய்தன.
அதிகாரி ஆய்வு
இந்த சம்பவங்கள் குறித்து அறிந்த மாவட்ட வன அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில், உதவி வன பாதுகாவலர் சிவகுமார், பூதப்பாண்டி வன சரகர் ரவீந்திரன் ஆகியோர் வன களப்பணியாளர்களுடன் உடையார் கோணம் தாடகை மலை அடிவாரத்துக்கு வந்தனர். அவர்கள் யானைகள் புகுந்த வாழைத்தோட்டம் மற்றும் தென்னந்தோப்புகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் யானை கூட்டம் சேதப்படுத்திய வாழை மற்றும் தென்னங்கன்றுகளுக்கு உரிய நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.