டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்ற அரசு பஸ்

நாகர்கோவில் ஒழுகினசேரியில் டயர் பஞ்சராகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2023-05-03 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஒழுகினசேரியில் டயர் பஞ்சராகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பஞ்சராகி நின்ற அரசு பஸ்

ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் வடசேரிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ் ஒழுகினசேரி பாலத்தை கடந்து வந்தபோது திடீரென பஸ்சின் பின்புற டயர் பஞ்சர் ஆனது. இதனால் பஸ்சானது நடுரோட்டில் நின்றது. டிரைவர் பஸ்சை ஓரம் கட்ட முயன்றார். ஆனால் முடியவில்லை. பஸ் நடுரோட்டில் நின்றதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஏற்கனவே ஒழுகினசேரி பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி ஆகும். இந்த நிலையில் அங்கு பஸ் பஞ்சராகி நின்றதால் ஒழுகினசேரி சந்திப்பில் இருந்து வடசேரி செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதே போல நெல்லை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்களும் ரோட்டில் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நின்றன.

பொதுமக்கள் கடும் அவதி

இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்களும் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த போக்குவரத்து கழக அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பஸ்சில் பஞ்சரான டயரை சரிசெய்யும் பணி நடந்தது.

போக்குவரத்து மாற்றம்

இதற்கிடையே போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர். அந்த வகையில் நெல்லை மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்களை வடசேரி அண்ணா சிலையில் இருந்து புத்தேரி பாலம் வழியாக 4 வழிச்சாலையில் சென்று பின்னர் அங்கிருந்து அப்டா மார்க்கெட் வந்து வழக்கமான வழியாக சென்றன. இதற்காக வடசேரி சந்திப்பில் போக்குவரத்து போலீசார் நின்று வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். நெல்லையில் இருந்து வடசேரிக்கு வந்த வாகனங்கள் பஞ்சராகி நின்ற பஸ்சின் ஓரமாக சென்று அந்த பகுதியை கடந்து சென்றன.

இதனையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு பஞ்சரான டயர் மாற்றப்பட்டு பஸ் அங்கிருந்து புறப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்