மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
இடையக்கோட்டை அருகே மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த பேக்கரி கடை உரிமையாளருக்கு தர்ம அடி விழுந்தது.;
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள சின்னகுளிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவருடைய மனைவி ராணி (வயது 45). நேற்று மதியம் இவர், குளிப்பட்டிக்கு சென்று ரேஷன்கடையில் அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்களை வாங்கினார். பின்னர் அவர் பின்.என்.கல்லுப்பட்டி சாலையில் நடந்து வந்து, சின்னகுளிப்பட்டியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்தார். ராணியை பின்தொடர்ந்து மர்ம நபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார்.
ஸ்கூட்டரை அங்கு நிறுத்தி விட்டு திடீரென ராணியின் வீட்டுக்குள் அவர் புகுந்தார். அங்கிருந்த ராணியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவிய மர்ம நபர், அவா் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அவர், கண்இமைக்கும் நேரத்தில் தான் வந்த ஸ்கூட்டரில் தப்பி சென்றார்.
கட்டி வைத்து தர்ம அடி
எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தால், நிலைகுலைந்து போன ராணி 'திருடன் திருடன்' என்று அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் ஸ்கூட்டரில் தப்பிய மர்ம நபரை அவர்கள் விரட்டி னர்.
இதனைக்கண்ட மர்ம நபர், ஸ்கூட்டரை அந்த பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள புதருக்குள் பதுங்கி கொண்டார். இதனையடுத்து பொதுமக்கள், சுற்றி வளைத்து மர்ம நபரை பிடித்தனர். பின்னர் அவரை அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
பேக்கரி கடை உரிமையாளர்
இதுகுறித்து இடையக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரபாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் பொதுமக்களிடம் இருந்து அவரை மீட்டு, இடையக்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கடற்கரை (வயது 50) என்று தெரியவந்தது. ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் எதிரே உள்ள திருவள்ளுவர் சாலையில் இவர், மருந்து கடை மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இவர் எதற்காக ராணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மிளகாய் பொடியை தூவி, பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் இடையக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.