தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் தங்க கட்டி திருட்டு
தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் தங்க கட்டி திருட்டு
கோவை
கோவையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான தங்க கட்டி திருடியதாக வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தொழில்அதிபர்
கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் (வயது 46), தொழில் அதிபர். இவர், சம்பவத்தன்று வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12½ லட்சம் மதிப்பிலான 150 கிராம் தங்க கட்டிகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் வேலை பார்த்து வந்த வேலைக்கார பெண்ணிடம் விசாரித்தார். அதற்கு அந்த பெண் முன்னுக்கு பின் முரணான பதிலை கூறினார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்த பெண் வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்முருகனுக்கு அந்த வேலைக்கார பெண் மீது சந்தேகம் எழுந்தது.
வேலைக்கார பெண் கைது
இந்த நிலையில் பொன்முருகன், திருட்டு தொடர்பாக அவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவம் நடந்த வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் தங்க கட்டிகளை திருடியது பொன்முருகன் வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம் முத்துசாமி செட்டி தெருவை சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி ஜோதி (47) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்து 93 கிராம் தங்க கட்டி பறிமுதல் செய்யப்பட்டது. மீதம் உள்ள தங்க கட்டியை அவர் எங்கே பதுக்கி வைத்து உள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.