ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த ஆடு... தலைகீழாக உள்ளே சென்று காப்பாற்றிய வீரர் - குவியும் பாராட்டு
உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.;
தூத்துக்குடி,
சாத்தான்குளம் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த ஆட்டை தலை கீழாக இறங்கி மீட்ட தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கடாட்சபுரம் கிராமத்தை சேர்ந்த ஞானராஜ் என்பவருடைய ஆடு ஒன்று, மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதையறிந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி ஆட்டை மீட்க முயன்றும் முடியவில்லை.
உடனே தீயணைப்பு படை வீரர் துரைசிங்கத்தை இடுப்பு மற்றும் காலில் கயிறை கட்டி தலைகீழாக உள்ளே இறக்கினர். அவர் இரண்டு முறை போராடி ஆட்டின் காலை பிடித்து மேலே கொண்டு வந்தார். உயிரை பணயம் வைத்து ஆட்டை மீட்கும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், தீயணைப்பு படை வீரருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.