கூடலூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த கேளை ஆடு
கூடலூர் அருகே தண்ணீர் தேடி வேளை ஆடு ஊருக்குள் புகுந்தது.
தேனி மாவட்டம் கூடலூர் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுரங்கனாறு பீட், பெருமாள் கோவில்புலம், கல்லுடைச்சான்பாறை, ஏகலூத்து உள்ளிட்ட வனப்பகுதிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் மான், கேளை ஆடு, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வனவிலங்குகள் ஊருக்குள் வரத்தொடங்கி உள்ளன.
இந்தநிலையில் இன்று கேளை ஆடு ஒன்று தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து கூடலூர் 16-வது வார்டு பகுதியான தண்ணீர் தொட்டி தெரு பகுதிக்கு வந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அந்த கேளை ஆட்டை பிடித்தனர். பின்னர் இதுகுறித்து கம்பம் மேற்கு வனச்சரகர் அன்புராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த கேளை ஆட்டை மீட்டனர். அப்போது கேளை ஆட்டின் கால்களில் காயம் ஏற்பட்டிருந்து. இதையடுத்து கூடலூர் கால்நடை மருத்துவமனைக்கு அந்த ஆட்டை வன காவலர்கள் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் அந்த கேளை ஆட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் பெருமாள் கோவில்புலம் வனப்பகுதிக்குள் கொண்டுபோய் விட்டனர். அது அங்கிருந்து காட்டுக்குள் ஓடியது.