பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி

கும்பகோணத்தில் தாத்தா கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி தலை நசுங்கி உயிரிழந்தாள்.

Update: 2023-04-09 19:30 GMT

கும்பகோணம்:

கும்பகோணத்தில் தாத்தா கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி தலை நசுங்கி உயிரிழந்தாள்.

சிறப்பு வகுப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாபுராஜபுரத்தை சேர்ந்தவர் ஜலாலுதீன். இவருடைய மகன் ஜுல் பிகார். இவர் வியட்நாமில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரில்ஹானா. இவர்களது மகள் ஷரின் (வயது 10). கும்பகோணம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த ஷரின் நேற்று காலை தனது தாத்தாவுடன் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே உள்ள தனியார் கல்வி மேம்பாட்டு சிறப்பு வகுப்புக்கு சென்றார். வகுப்பு முடிந்தவுடன் ஜலாலுதீன் தனது பேத்தி ஷரினை பாபுராஜபுரத்தில் உள்ள வீட்டுக்கு ஸ்கூட்டரில் கும்பகோணம் பழைய பாலக்கரை காவிரி ஆற்று பாலம் வழியாக அழைத்து சென்றார்.

சிறுமி தலைநசுங்கி பலி

அப்போது ஜலாலுதீன் ஸ்கூட்டருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ திடீரென நின்றது. இதனால் ஜலாலுதீன், ஆட்டோ மீது மோதாமல் இருக்க ஸ்கூட்டரை வேறு பக்கம் திருப்பினார். அப்போது ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்திருந்த ஷரின் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தாள். .

அப்போது பாலக்கரை பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் சக்கரம் ஷரின் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில் சிறுமி ஷரின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

பஸ் டிரைவர் தப்பி ஓட்டம்

இந்த விபத்தில் ஜலாலுதீனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தை ஏற்படுத்திய பஸ் டிரைவர் ஜோதி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமி ஷரின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தாத்தா கண் எதிரே சிறுமி பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்