நூதன முறையில் செல்போன் கோபுரத்தை திருடி விற்ற கும்பல் சிக்கியது

செல்போன் கோபுரத்தை நூதன முறையில் திருடி விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-30 20:51 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு செல்போன் கோபுரத்தை கடந்த ஜூலை மாதம் 27-ந் தேதி, போலி ஆவணங்களை காண்பித்து மர்ம கும்பல் ராட்சத கிரேன் எந்திரங்களை பயன்படுத்தி கழற்றி கடத்தி சென்றது.

இதுகுறித்து சென்னையை சேர்ந்த அந்த நிறுவன மேலாளர் தமிழரசன் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், செல்போன் கோபுரத்தை தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 33), நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஏமன்குளம் பகுதியை சேர்ந்த நாகமுத்து (35), வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த ராகேஷ் சர்மா (38) ஆகிய மூவரும் திருடி, ஸ்ரீவில்லிபுத்தூரில் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார், ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் எடை மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியில் திருடப்பட்ட செல்போன் கோபுரத்தின் பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் 10 டன் எடையுள்ள இரும்பு தளவாட பொருட்கள், ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நூதன திருட்டில் வேறுயாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும், மீட்கப்படாத மற்ற உதிரி பாகங்களை மீட்பது குறித்தும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிர்ச்சி தகவல்

இந்த சம்பவத்தை போன்றே, ஒரு கும்பல் உள்ளூர் புள்ளிகளின் உதவியுடன், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செயல்படாத ஏராளமான செல்போன் கோபுரங்களை நூதன முறையில் திருடி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சென்னை, ராணிப்பேட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், திருப்பத்தூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதே பாணியில் செல்போன் கோபுரம் திருடப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்