நண்பன் தற்கொலையை தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி உயிரை விட்ட வாலிபர்

அரக்கோணத்தில் நண்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை தாங்க முடியாமல், நானும் வருகிறேன் என ஸ்டேட்டஸ் வைத்து விட்டு அதே கயிற்்றில் வாலிபர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்தார்.

Update: 2023-06-02 17:59 GMT

தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சோமசுந்தரம் நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் விஷால் (வயது 19), பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக தெரிகிறது. கடந்த 28-ந் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தியடைந்த விஷால் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதே பகுதியை சேர்ந்த விஷாலின் நண்பர் அஜித் என்கிற குண்டு (20), தூக்கில் தொங்கியபடி இருந்த நண்பன் விஷால் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு விஷாலை பரிசோதித்த டாக்டர்கள், விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அஜித் கதறி அழுதார்.

இதற்கிடையே விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட கயிற்றை கையில் வைத்துக் கொண்டு இணை பிரியாமல் இருந்த அஜித் செய்வதறியாமல் அங்கும், இங்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்துள்ளார். மேலும் விஷால் உடல் புதைக்கப்பட்ட சுடுகாட்டிற்கு அவ்வபோது சென்று பார்த்து வந்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

கடந்த 30-ந் தேதி இரவு அஜித், மதுபாட்டில், இனிப்பு, பழம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு விஷால் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று மதுவை விஷால் புதைத்த இடத்தில் ஊற்றி, சுவீட் மற்றும் பழங்களை படையலிட்டு அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டு இருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவருக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில், நண்பன் விஷால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றால் அஜித் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே அஜித் உடலையும் புதைத்தனர்.

'நானும் வருகிறேன்'

அஜித் தற்கொலை செய்வதற்கு முன் அதிகாலை 2.50 மணிக்கு, விஷாலுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை செல்போன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து, நானும் வருகிறேன் என பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் நெஞ்சில் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைபிரியாத நண்பர்கள் 2 பேரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்