காஞ்சீபுரத்தில் தண்டவாள தடுப்பை உடைத்து கொண்டு ரோட்டுக்கு வந்த சரக்கு ரெயில்

காஞ்சீபுரத்தில் தண்டவாள தடுப்பை உடைத்து கொண்டு ரோட்டுக்கு வந்த சரக்கு ரெயிலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-03 23:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம்-வையாவூர் சாலையில் பழைய ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் சரக்கு முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது வரும் சரக்கு ரெயில் முனையத்தில் வந்து நிற்கும், அப்போது சரக்கு ரெயில்களில் இருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்து செல்லப்படும்.

இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த 59 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலை டிரைவர் பின்னோக்கி இயக்க முற்பட்டபோது, சரக்கு முனையத்திலுள்ள தண்டவாளத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியேறி சாலைக்கு வந்து விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனங்கள் சேதம்

இந்த விபத்தில் அப்போது சாலையில் கடந்து சென்ற 3 இருசக்கர வாகனங்களும் ரெயில் பெட்டிக்கடியில் மாட்டிக்கொண்டு முழுமையாக சேதமடைந்தது. விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக இரு சக்கர வாகனத்தை விட்டு தப்பித்து சாலையில் குதித்ததால் உயிர்தப்பினர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்பாராதவிதமாக வாக்கி டாக்கி சிக்னல் கோளாறு காரணமாக விபத்து நேரிட்டதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. காஞ்சீபுரம் போலீசார் பொதுமக்கள் யாரும் உள்ளே வராமல் இருக்க தடுப்புகளை அமைத்தும், போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. 4 மணி நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்படும் என என்ஜினீயர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்