வனவிலங்குகளை வேட்டையாட சென்றவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்
கவுத்திமலை காப்புக்காட்டுக்கு வனவிலங்குகளை வேட்டையாட சென்றவருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் நேற்று நள்ளிரவு கவுத்திமலை காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்தில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் நெற்றியில் பேட்டரியுடன் சுற்றி திரிவதை கண்ட வனத்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.
இதில் மேல்சோழங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி (வயது 30) என்பவரை மடக்கி பிடித்தனர்.
அவருடன் வந்த மற்ற 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.
பிடிபட்ட தங்கமணிக்கு மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.