'நட்பு, வணிகம், கொண்டாட்டம்' பெயரில் சென்னை திருவிழா - நந்தனம் கல்லூரியில் நடக்கிறது
தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் ‘நட்பு, வணிகம், கொண்டாட்டம்' என்ற பெயரில் சென்னை திருவிழா, சென்னை நந்தனம் ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது.;
சென்னை தினத்தை முன்னிட்டு, தமிழர் தொழில் வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை திருவிழாவை, சென்னை நந்தனத்தில் உள்ள நந்தனம் ஆண்கள் கல்லூரியில் நடத்துகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா, நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது.
இந்த திருவிழாவில் சிறு, குறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள், தனித்துவம் வாய்ந்த பொருட்களை சந்தைப்படுத்த விரும்புவோர் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துவது, காட்சிப்படுத்துவதற்காக வணிக கண்காட்சி நடத்தப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்தின் அனைத்து விதமான பாரம்பரிய உணவுப் பொருட்கள், தினை உணவு பொருட்கள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் இந்த திருவிழாவில் சாப்பிட முடியும்.
சென்னையில் வசிக்கும் பெரும்பாலானோர்களுக்கு ஜல்லிக்கட்டு காளைகளை பார்க்கு வாய்ப்பு குறைவு. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் தொண்டை மண்டலத்தை சேர்ந்த காளை மாடுகளை பார்க்கும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. அதனையும் இந்த திருவிழாவில் பார்க்க முடியும். இதுதவிர 100 வகையான மூலிகை செடிகளை கொண்ட கண்காட்சியும் இதில் இடம்பெற்றுள்ளன.
இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறு, குறு தொழில் முனைவோர்கள், பெருந்தொழில் முனைவோர்களையும் ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் ஒன்று கூடல் நிகழ்வும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இலவச மருத்துவ முகாமும் நடத்தப்பட இருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல், திருவிழா நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இசை, நடனம், கச்சேரி, கிராமிய விளையாட்டுகள், சிலம்பம், களறி அடிமுறை, மல்லம் போன்ற மரபுவழி வீர விளையாட்டுகளும் நடைபெற உள்ளன.
மேலும், பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு, உதவிக்கரம் நீட்டியவர்களுக்கு, கொரோனா காலத்தில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் ஒவ்வொரு நாளும் நடக்க இருக்கிறது.