நலிவடைந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்
நலிவடைந்து வரும் செருப்பு தைக்கும் தொழில்;
ராமேசுவரம்
கால் பாதங்களை பதம் பார்க்காமல் பாதுகாக்கும் கேடயமாக கருதப்படும் காலணிகள் (செருப்பு) இன்றைக்கு அழகுசாதன பொருட்கள் பட்டியலில் இணைந்துள்ளன. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பஸ் நிலையங்கள், ரெயில் நிலைய வெளிப்பகுதி போன்ற இடங்களில் வரிசையாக அமர்ந்து ஷூவுக்கு பாலீஷ் போடுவது, செருப்பு தைப்பது என்று செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் மிகவும் பிசியாக இருந்து வந்தனர். தற்போது செருப்புகள் பல்வேறு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செருப்புகள் அறுந்து போனால் அடுத்த நொடியே தூக்கி எறிந்துவிட்டு புதிய செருப்பை வாங்கி பயன்படுத்தும் கலாசாரம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பிய்ந்த செருப்பை தைத்து போடுவதை கவுரவ குறைச்சலாக கருதுபவர்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் செருப்பு தைக்கும் தொழில் நலிவடைந்து வருகிறது. பிய்ந்த செருப்பை தைத்து பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. செருப்பை போன்று தங்களுடைய தொழிலும் தேய்ந்து போய்விட்டது என்பது இந்த தொழிலை தாங்கி பிடித்து வரும் தொழிலாளர்களின் மனநிலையாக இருக்கிறது. செருப்புகள் அறுந்து போனால் அதை தூக்கி வீசிவிட்டு உடனடியாக புதிய செருப்புகளையே அனைவரும் பயன்படுத்தவும் முன் வந்துவிட்டனர். இதனால் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே செருப்பு தைக்கும் தொழிலாளி வீரன்(வயது 60) கூறியதாவது:-
பல ஆண்டுகளாகவே ராமேசுவரம் பஸ் நிலையம் அருகே செருப்பு தைத்து வருகிறேன். முன்பெல்லாம் செருப்பு அறுந்து போனால் அறுந்த செருப்புடன் வந்து அதை தைத்துவிட்டு பயன்படுத்துவார்கள். இதனால் எங்களுக்கு அப்போதைக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 400 வரை வருமானம் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக செருப்பு தைக்க ஓரிரு நபர்கள் தான் வருகின்றனர். செருப்பு அறுந்து போனால் உடனடியாக அதை தூக்கி வீசிவிட்டு புதிய செருப்புகளை வாங்கி பயன்படுத்தி சென்று விடுகின்றனர். தற்போது ஒரு நாளைக்கு 100 லிருந்து 200 ரூபாய் வருமானம் தான் கிடைக்கிறது. எனவே வருமானம் இன்றி தவிக்கும் செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு மாதம் தோறும் நிவாரண உதவி வழங்கினால் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகே உள்ள செருப்பு தைக்கும் தொழிலாளி முருகன் கூறியதாவது, ராமநாதபுரம் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை என பல இடங்களிலும் 50-க்கும் மேற்பட்ட செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் இருந்து வந்தோம். ஆனால் தற்போது மிகக் குறைந்த அளவிலான தொழிலாளர்கள் மட்டும்தான் இருந்து வருகின்றோம். முன்பு ஒரு நாளைக்கு 400 ரூபாய் வரை வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அறுந்த செருப்புகளை யூஸ் அன் த்ரோ என சொல்வது போல் தூக்கி வீசிவிட்டு உடனே புதிய செருப்புகளை வாங்கி விடுகின்றனர். பழைய அறுந்து போன செருப்புகளை தைத்து முன்பு போல் யாரும் தற்போது காலில் அணிய வேண்டும் என விரும்புவது கிடையாது. செருப்பு தைக்கும் தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் அரசு நிவாரண உதவி வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.
புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளியை இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அறுந்து போன செருப்புகளுடன் தேடி அலையும் நிலை தான் தற்போது உள்ளது.