ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து இருமடங்கு அதிகரிப்பு

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-08-10 05:04 GMT

கோப்புப்படம்

பென்னாகரம்,

கர்நாடகா மாநிலங்களில் மழையின் அளவு குறைந்ததன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு வரும் நீரின் அளவு குறைந்து நேற்று வினாடிக்கு 8,000 கன அடியாக நீடித்து வந்தன.

இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்.அணையும், கபினி அணையும் நிரம்பிவிட்டன. 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 124.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 ஆயிரத்து 403 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 25 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு இருந்தது.

இதுபோல் 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 12 மணி நிலவரப்படி 2,284.46 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் கபிலா ஆற்றில் திறந்து விடப்பட்டு இருந்தது.

அதன்படி இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 18 ஆயிரத்து 25 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 12 ஆயிரத்து 752 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நீர் வரத்து குறைந்ததால் மேற்கொள்ளப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 25 நாட்களுக்கு பிறகு 2 நாட்களாக பரிசல் பயணம் துவங்கிய நிலையில், மீண்டும் தடை விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்