கலெக்டர் அலுவலகத்தில் சகோதரியுடன் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

நிலத்தை அபகரிக்க உறவினர்கள் முயற்சி செய்வதாக கூறி மாற்றுத்திறனாளி மற்றும் அவரது சகோதரி தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-08-22 22:45 GMT

தீக்குளிக்க முயற்சி

வாழப்பாடி அருகே உள்ள தேக்கல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). மாற்றுத்திறனாளி. இவரது உடன் பிறந்த சகோதரி ரம்யா (40). இவர்கள் இருவரும் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

பின்னர் அவர்கள் நில அபகரிப்பு பிரச்சினை தொடர்பாக கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினர். பிறகு அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தப்பட்டது.

நிலத்தை அபகரிக்க முயற்சி

இதுகுறித்து மாற்றுத்திறனாளி மணிகண்டன் கூறுகையில், எங்களுக்கு சொந்தமாக 1 ஏக்கர் 37 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை உறவினர்கள் சிலர் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர். நிலத்தை தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகின்றனர். இதுகுறித்து வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாற்றுத்திறனாளியாக இருக்கக்கூடிய நான் அந்த நிலத்தை வைத்து தான் வாழ்ந்து வருகிறேன். எனவே, நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் உறவினர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களது நிலத்திற்கும், எங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என்றார்.

மாற்றுத்திறனாளி, சகோதரியுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்