தென்பெண்ணையாற்றின் குறுக்கே மதுபிரியர்களுக்காக அமைக்கப்பட்ட மண் சாலை

புதுச்சேரி மாநில பகுதிக்கு சென்று மது, சாராயம் குடித்து வருவதற்காக தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மதுபிரியர்களுக்காக மண் சாலை அமைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-02-07 21:51 IST

கடலூர் மாவட்டம் அருகாமையில் புதுச்சேரி மாநிலம் உள்ளது. இங்கு, தமிழகத்தை காட்டிலும் குறைந்த விலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, சாராயம் விற்பனையும் அங்கு நடந்து வருகிறது. இதனால் இங்கிருந்து மதுபிரியர்கள் அங்கு அதிகளவில் சென்று மது அருந்தி வருகிறார்கள். இதற்காக கடலூர்-புதுச்சேரி மாநிலத்தை பிரிக்கும் வகையில் உள்ள தென்பெண்ணை ஆற்றை கடந்து மதுபிரியர்கள் செல்ல வேண்டி உள்ளது.

ஆற்றில் பாதி தமிழகத்துக்கும், மீதமுள்ள பாதி புதுச்சேரி மாநிலத்துக்கும் சொந்தமானதாக இருக்கிறது. தற்போது ஆற்றில தண்ணீர் வரத்து இருந்து வருகிறது. அதேபோன்று சில இடங்களில் தண்ணீர் அதிகளவில் தேங்கியும் நிற்கிறது. எனவே மதுபிரியர்கள் எளிதில் வந்து செல்வதற்காக தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி பகுதியில், அங்குள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் தற்காலிக மண் சாலையை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள்.

மண் சாலை

அந்த வகையில், நெல்லிக்குப்பம் அடுத்த முள்ளிகிராம்பட்டு பகுதியில் இருந்து தென்பெண்ணையாற்றை கடந்து புதுச்சேரி மாநிலம் மணல்மேடு பகுதியில் உள்ள சாராய கடைக்கு சென்று மது குடித்து வருவதற்காக , அந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே மண் சாலையை சிலர் அமைத்துள்ளனர். இதில் புதுச்சேரி மாநில பகுதிக்கு உட்பட்ட பகுதியை கடந்து, தமிழக பகுதியிலும் அவர்கள் மண் சாலை அமைத்தனர். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தெரிவித்தனர்.

இரவோடு இரவாக அகற்றினர்

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு தென்பெண்ணை ஆற்றுக்கு பொக்லைன் எந்திரத்தை கொண்டு சென்று, ஆற்றில் தமிழக பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த சாலையை அப்புறப்படுத்தினர். மேலும், புதுச்சேரி மாநில பகுதிக்கு உட்பட்ட சாலையை துண்டிக்கும் விதமாக, தமிழக பகுதியில் பெரிய பள்ளம் ஒன்றையும் போலீசார் தோண்டினர். தொடர்ந்து அந்த வழியாக மது பிரியர்கள் செல்லாத வகையில் போலீசார் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதோடு, மதுபிரியர்கள் வந்து செல்ல மண்சாலை அமைத்தது யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்