கோவில் திருவிழாவில் வினோத வழிபாடு; சேற்றை வாரி பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்த பக்தர்கள்

கொடைக்கானல் அருகே கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேற்றை வாரி பூசிக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினர்.

Update: 2022-12-11 17:07 GMT

கொடைக்கானல் அருகே கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் சேற்றை வாரி பூசிக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினர்.

கோவில் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள்.

அதன்படி, 3 ஆண்டுகளுக்கு பிறகு தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவிலில் இன்று திருவிழா தொடங்கியது. இதையொட்டி தாண்டிக்குடி, காமனூர், மங்களம்கொம்பு, கானல்காடு, பட்டலங்காடு, கொடங்காடு, பண்ணைக்காடு, அரசன்கொடை உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் நேற்று காலை கோவிலில் குவிந்தனர். அப்போது பூ போட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.

வினோத வழிபாடு

பின்னர் மாலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.

அப்போது பக்தர்கள் ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி பூசிக்கொண்டு சேத்தாண்டி வேடமணிந்து ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இதில், சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி பூசிக்கொண்டனர்.

இதையடுத்து தாண்டிக்குடி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற பக்தர்கள், இறுதியில் கோவிலுக்கு வந்தனர். அங்கு ஒன்றாக கூடி வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், மலைக்கிராம மக்கள் நோயின்றி வாழவும், விவசாயம் செழிக்க வேண்டியும் இவ்வாறு சேற்றை பூசி வழிபாடு நடத்தப்படுகிறது என்றனர்.

பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆபரண பெட்டி கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ஆபரண பெட்டியில் இருந்த நகைகள் முத்தாலம்மன், பட்டாளம்மனுக்கு அணிவித்து பூஞ்சோலைக்கு சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

3 நாட்கள் நடக்கும் திருவிழாவில் 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது. 3-ம் நாளான நாளை கரகம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், மலைக்கிராம மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்