வெறிச்சோடி கிடக்கும் நாகை மீன் மார்க்கெட்

புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக நாகை மீன் மார்க்கெட் தொடர்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது. போட்ட முதலுக்கு கூட விற்பனையாகவில்லை என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-10 18:45 GMT

புரட்டாசி மாதத்தின் எதிரொலியாக நாகை மீன் மார்க்கெட் தொடர்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது. போட்ட முதலுக்கு கூட விற்பனையாகவில்லை என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் பெரும்பாலான இந்துக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும்.

தற்போது புரட்டாசி மாதம் நடைபெறுவதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது.இறைச்சி மற்றும் மீன் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

நாகையில் பல இடங்களில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகள் பெரும்பாலானவை திறக்கப்படவில்லை. வழக்கமாக செயல்படும் கடைகளில் 75 சதவீத கடைகள் மட்டுமே திறக்கப்படுகின்றன.

ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாக, இறைச்சி கடை ஒன்றில் குறைந்தது 5 ஆடுகள் முதல், 20 ஆடுகள் வரை வெட்டப்படும். ஆனால் தற்போது 2, 3 ஆடுகள் மட்டுமே வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட ஆடு, கோழிகளின் இறைச்சியை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்ற வகையில் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை விலையை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர். நாகை அண்ணா சிலை அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மீன்கள் விலை குறைந்தது

வாங்க ஆட்கள் இல்லாததால் மீன்கள் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று நாகை மீன் மார்க்கெட்டில் ரூ.300-க்கு விற்ற ஒரு கிலோ இறால், கனவா மீன்கள் ரூ.150-க்கும், ரூ.200-க்கு விற்ற துள்ளுக்கெண்டை ரூ.100-க்கும், ரூ.300-க்கு விற்ற கிழங்கா மீன் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.மீன்களை வாங்க மக்கள் வராததால் வேதனை அடைந்த வியாபாரிகள், போட்ட முதலுக்கு கூட மீன்கள் விற்பனை ஆகவில்லை என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்