அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுா்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் 2-ம் நாளாக நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2023-09-29 17:38 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுா்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் 2-ம் நாளாக நேற்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை சுமார் 6.45 மணியளவில் தொடங்கி நேற்று மாலை சுமார் 4.35 மணியளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

தொடர்ந்து 2-வது நாளான நேற்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதனால் திருவண்ணாமலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

நேற்று மாலை வரை பவுர்ணமி நீடித்ததால் இரவு வரை பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து பவுர்ணமி கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட பொது தரிசன வழியில் சென்று சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் கூறினர்.

கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் போலீசார் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிரிவலம் முடித்த பக்தர்கள் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

அப்போது அவர்கள் பஸ்களில், ரெயிலில் அமர்ந்து செல்லும் வகையில் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஏறினர்.

இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்