6 கால்களுடன் அதிசய கன்றை ஈன்ற பசு
எரியோடு அருகே, 6 கால்களுடன் அதிசய கன்றை பசு ஈன்றது.;
எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். விவசாயி. இவர், அப்பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அங்கு பசுமாடு ஒன்றையும் வளர்த்து வருகிறார். சினையாக இருந்த அந்த பசுமாடு நேற்று காலை கன்றுக்குட்டியை ஈன்றது. பொதுவாக கன்று, மாடுகளுக்கு நான்கு கால்கள் தான் இருக்கும். மாறாக பெருமாளின் பசுமாடு ஈன்ற கன்றுக்குட்டிக்கு 6 கால்கள் இருந்தன.
அந்த கன்றுக்குட்டியின் முன்பகுதியில் 2 கால்களும், பின்பகுதியில் 4 கால்களும் இருந்தன. இதனால் அந்த கன்று அதிசயமாக பார்க்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் நல்லமநாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெருமாளின் தோட்டத்துக்கு சாரை, சாரையாக வந்து, அதிசய கன்றுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இதற்கிடையே அந்த அதிசய கன்று சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தண்ணீர்பந்தம்பட்டி அரசு கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இறந்த கன்றுக்குட்டியை பரிசோதனை செய்தனர்.