புத்தக கண்காட்சியில் மாறுவேட போட்டி
கோவில்பட்டியில் புத்தக கண்காட்சியில் மாறுவேட போட்டி நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், புனித ஓம் கல்வி நிறுவனங்கள் சார்பில் புத்தக கண்காட்சி கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சி அரங்கில் குழந்தைகளுக்கான மாறுவேட போட்டி நடந்தது.
இதில் 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் நேரு, திருப்பூர் குமரன், பாரதியார், பாரதமாதா, மகாத்மா காந்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், அன்னை தெரசா உள்ளிட்ட தேச தலைவர்களின் வேடம் அணிந்து கண்காட்சியில் உள்ள புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் தலைமை தாங்கினார். திருவள்ளுவர் மன்ற துணைத் தலைவர் திருமலை முத்துசாமி, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் வரவேற்று பேசினார். திரைப்பட இணை இயக்குனர் ராஜசேகரன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார்.
இதில் வக்கீல் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட நூலக ஆய்வாளர் பூல்பாண்டி, தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள் சீனிவாசன், ராஜபாண்டி, சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க பொருளாளர் ரமேஷ் நன்றி கூறினார்.