கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
பெத்தநாயக்கன்பாளையத்தில் கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
பெத்தநாயக்கன்பாளையம்:-
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த ரோட்டில் சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் சுரேஷ் பாபு என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த கன்டெய்னர் லாரி பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் எதிரே வந்த போது திடீரென்று என்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. அந்த தீ லாரி முழுவதும் பரவியது. உடனே லாரியை சாலையோரம் நிறுத்திய டிரைவர், அதில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். இது குறித்து வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனிடையே அந்த பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழையினால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள், லாரியில் கொழுந்து விட்டு எரிந்த தீ அணைந்தது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் லாரியில் இருந்த பொருட்களை மீட்டனர். தீ விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.