கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல்; வீடுகளின் கூரைகள் சூறை

கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதலில் வீடுகளின் கூரைகள் சூறையாடப்பட்டது.

Update: 2023-06-01 20:35 GMT

தொட்டியம்:

தாக்குதல்

தொட்டியம் அருகே உள்ள வரதராஜபுரம் மகாமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 20-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 31-ந் தேதி அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரை, ஒரு தரப்பை சேர்ந்த மருதை மகன் பிச்சை ரத்தினம், சண்முகம் மகன் வினோத்குமார் ஆகியோர் வழிமறித்து, அவர் அணிந்திருந்த பனியனை கழற்றுமாறு கூறி, சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், கீழே கடந்த கல்லை எடுத்து பிரகாசை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த பிரகாஷை, அவரது தரப்பினர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றபோது, வழியில் அவர்களை வழிமறித்து பிரபாகரன், யுவராஜ், விக்னேஷ், துளசிராமன், நந்தகுமார், முத்து மற்றும் பலர் சேர்ந்து பிரகாசுடன் வந்த முகேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

அடித்து உடைத்தனர்

மேலும் அவர்கள் வரதராஜபுரத்தை சேர்ந்த மனோகரன், துரைராஜ், ரவி, வாமுனி, தென்னரசன் ஆகியோரின் வீட்டிற்கு முன் போடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் கூரைகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும் தெரிகிறது. மேலும் அவர்கள் பிரகாஷ், முகேசுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து வரதராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்த ராஜரத்தினத்தின் மகன் ராஜவேல் கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிச்சைரத்தினம், வினோத் குமார், விஜயகுமார், பிரபாகரன், யுவராஜ், விக்னேஷ், துளசிராமன், நந்தகுமார் ஆகிய 8 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் முத்து, சேதுபதி, குணா, நாகராஜ், ஆப்பவாய் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார், அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

22 பேர் கைது

இதேபோல் வரதராஜபுரம் மேலத்தெருவை சேர்ந்த வைர மூர்த்தியின் மகன் விக்னேஷ் கொடுத்த புகாரில், வரதராஜபுரம் மகாமாரியம்மன் கோவில் தேரை மேலத் தெருவில் இழுத்து வந்தபோது, ஏன் பிரகாஷை வழிமறித்து அடித்தீர்கள் என்று கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி ராஜவேல் மற்றும் வினோத்குமார் ஆகியோர் தன்னை தாக்கினர். இதை பார்த்த பிச்சை ரத்தினம், வினோத்குமார், உதயகுமார், பிரபாகரன், யுவராஜ், துளசிராமன், காமராஜர் துளசிராமன், நந்தகுமார் ஆகியோர் இதனை தட்டிக்கேட்டதற்கு, ராஜவேல், வினோத்குமார், வீரமணி, ஜோதிவேல், பாலச்சந்திரன், மகாமுனி, ராஜபாண்டியன், முகேஷ், திவாகர் ஆகியோர் ஒன்றுசேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர், என்று கூறியிருந்தார். இதன்ேபரில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அதில் 7 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். முகேஷ், திவாகர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில் திருவிழாவில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாக மொத்தம் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொட்டியம், முசிறி போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்