கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கல்லூரி மாணவர்; மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார்
கொடைக்கானல் ‘டால்பின் நோஸ்’ வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார்.;
கொடைக்கானல் 'டால்பின் நோஸ்' வனப்பகுதியில் 100 அடி பள்ளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்தார். மரக்கிளையை பிடித்து அவர் உயிர் தப்பினார்.
'டால்பின் நோஸ்'
'மலைகளின் இளவரசி' யான கொடைக்கானலில் விழிகளுக்கு விருந்து படைக்க ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் ஒன்று தான் 'டால்பின் நோஸ்'. இது வனப்பகுதியில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலாதலம் ஆகும். இங்குள்ள பாறை டால்பின் (ஒரு வகை மீன்) மூக்கு வடிவத்தில் இருக்கும். இதனால் அந்த இடத்துக்கு 'டால்பின் நோஸ்' என்ற பெயர் ஏற்பட்டது.
மரம், செடி, கொடிகள் அடர்ந்து படர்ந்த பசுமை போர்த்திய சூழலில் 'டால்பின் நோஸ்' அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. மேலும் அந்த பாறையில் இருந்து, சுமார் 6 ஆயிரம் அடி பள்ளத்தாக்கு உள்ளது. இது காண்போரின் நெஞ்சத்தை பதை, பதைக்க செய்யும்.
வித்தியாசமான அனுபவம்
வருடத்தின் பெரும்பாலான நாட்கள், இந்த பள்ளத்தாக்கை பனிமூட்டம் ஆக்கிரமிப்பது வாடிக்கை. கோடையிலும், வாடையிலும் தன்னிலை மாறாமல் எழில் கொஞ்சும் பேரழகை கொண்ட, 'டால்பின் நோஸ்' சுற்றுலாதலத்தை கண்டுகளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானலில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்டக்கானல் என்ற இடம் உள்ளது. அங்கிருந்து கரடு முரடான மலைப்பாதை வழியாக 'டால்பின் நோஸ்' பகுதிக்கு நடந்து செல்வது சுற்றுலா பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.
கொடைக்கானலுக்கு சுற்றுலா
கொடைக்கானலுக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் 'டால்பின் நோஸ்' பகுதியை பார்த்து விட்டே செல்கின்றனர். அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 20 பேர் நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.
வட்டக்கானல் வரை வேனில் வந்த அவர்கள், அங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கரடு முரடான மலைப்பாதை வழியாக நடந்து சென்று 'டால்பின் நோஸ்' என்னும் பாறையை வந்தடைந்தனர். அங்கு தவழ்ந்து சென்ற மேக கூட்டம், உடலை சிலிர்க்க வைத்த தென்றல் காற்று, பசுமை போர்த்திய மரம், செடி, கொடிகள் ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
தவறி விழுந்த மாணவர்
மாணவர்களில் ஒருவரான பிரதாப் (வயது 19) என்பவர் 'டால்பின் நோஸ்' பாறையின் நுனி பகுதியில் நின்று கொண்டிருந்தார். திடீரென அவர் யாரும் எதிர்பாராத வகையில் பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
பள்ளத்தாக்கில் உருண்டு கொண்டே சென்ற அவர், அங்கிருந்த ஒரு மரக்கிளை இடையே மாட்டிக்கொண்டார். மரக்கிளையை பிடித்தபடி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அவர் அபயகுரல் எழுப்பினார். இதனைக்கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். செய்வதறியாது திகைத்தனர்.
வனத்துறை, போலீசார், தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தாலும் அவர்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று கருதினர். இதனால் தாங்களே பள்ளத்தில் இறங்கி, தனது நண்பரை மீட்கும் பணியில் ஈடுபட முடிவு செய்தனர்.
100 அடி பள்ளத்தில்...
அதன்படி தங்களது உயிரை பொருட்படுத்தாமல் பள்ளத்தாக்கில் கீழே இறங்கினர். பின்னர் சுமார் 100 அடி பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் பிரதாப் சிக்கி இருந்தார். இதனைக்கண்ட மாணவர்கள், அவரை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர்.
திக், திக் பயத்துடன் அடுத்த சில நிமிடங்களிலேயே மீட்பு பணி முடிந்து விட்டது. தவறி விழுந்ததால் பிரதாப்பின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. இதனால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
அதன்படி 'டால்பின் நோஸ்' பகுதியில் இருந்து மலைப்பாதை வழியாக பிரதாப்பை சக மாணவர்கள் தூக்கி கொண்டு வட்டக்கானலுக்கு வந்தனர். அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சு வாகனம் மூலம் பிரதாப் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 'டால்பின் நோஸ்' சுற்றுலாதலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தவறி விழுந்த சம்பவம் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சுற்றுலாதலத்துக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.