குழந்தை விற்க முயன்ற விவகாரத்தில்கோவை பெண்ணிடம் போலீசார் விசாரணை

திருச்செங்கோட்டில் குழந்தையை விற்க முயன்ற விவகாரத்தில் கோவையை சேர்ந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2023-10-18 18:36 GMT

திருச்செங்கோடு

குழந்தை விற்பனை

திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி தினேஷ்-நாகஜோதி தம்பதிக்கு கடந்த 12-ந் தேதி 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றிய மகப்பேறு டாக்டர் அனுராதாவும், கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள் (வயது38) என்பவர் மூலம் ரூ.2 லட்சம் தருவதாக தினேஷ், அவரது மனைவி நாகஜோதியிடம் பேரம் பேசி பச்சிளம் குழந்தையை விற்க கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.

இதுகுறித்து தினேஷ் அளித்த புகாரின் பேரில் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அனுராதா, குழந்தைகள் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குமாரபாளையம் பகுதியை சேர்ந்த இடைத்தரகர் பாலாமணி(41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் நிறைய புரோக்கர்களுக்கு தொடர்பு உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் புரோக்கர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லோகாம்பாளின் செல்போனை வைத்து தொடர்பில் உள்ளவர்களையும் அழைத்து விசாரணை செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கோவை பெண்ணிடம் விசாரணை

இந்தநிலையில் நேற்று கோவையை சேர்ந்த மீரா என்பவரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மீரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்செங்கோட்டில் வசித்து வந்தார். அப்போது அவரது கணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பணத்தேவை ஏற்பட்டதாகவும், அதற்காக மீரா தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த லோகாம்பாள், மீராவிடம் பேசி திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவருக்கு இவரது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தா ர். பின்னர் சிறுநீரகம் பயன்படாது என கூறிவிட்டதாக தெரிகிறது.

சில மாதங்கள் கழித்து லோகாம்பாள், மீராவை தொடர்பு கொண்டு வேறு ஒருவருக்கு சிறுநீரகம் தேவை என கேட்டு அடிக்கடி போன் செய்ததாகவும், தான் மறுத்து விட்டதாகவும் மீரா போலீசில் கூறியுள்ளார். இதனை வாக்கு மூலமாக பெற்றுக்கொண்ட போலீசார் மீராவை திருப்பி அனுப்பி உள்ளனர். இதுபோல் அவருடைய தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லோகாம்பாள் கைதான தகவல் அறிந்து சேலம் சித்ரா உள்ளிட்ட பல புரோக்கர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்