தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தை டாக்டர்கள் மீது உறவினர்கள் புகார்
தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவத்தின் போது, இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதற்கு டாக்டர்களின் அலட்சியம் தான் காரணம் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.;
தம்மம்பட்டி
பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தை
தம்மம்பட்டி அடுத்த நாகியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நவநீதகுமார் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு (19). நிறைமாத கர்ப்பிணியான மஞ்சுவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 17-ந் தேதி காலை 10 மணிக்கு தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவு 9 மணிக்கு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள், மஞ்சுவிற்கு பிரசவம் பார்த்தனர்.
அப்போது வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு மஞ்சுவிற்கு, தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்பப்பையை ஆபரேசன் செய்து அகற்றினால் மட்டுமே அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு மஞ்சுவிற்கு அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பை அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்கள், செவிலியர்களுடன், உங்களின் கவனக்குறைவால் தான் மஞ்சுவிற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது எனக்கூறி கடு்மையாக வாக்குவாதம் செய்தனர்.
உறவினர்கள் புகார்
தகவலறிந்த தம்மம்பட்டி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், அந்த பெண்ணின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அவரிடம், பிரசவம் பார்த்த டாக்டர்கள், செவிலியர்களின் அலட்சியத்தால் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கவேண்டும், என மஞ்சுவின் உறவினர்கள் புகார் மனு அளித்தனர்.
தம்மம்பட்டியில் டாக்டர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்கு சென்ற 19 வயது இளம்பெண்ணுக்கு கர்ப்பப்பை அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.