மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்தக் கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update:2022-11-23 13:55 IST

சென்னை,

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை ஆன்லைனில் நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சையத் தாஹிர் உசேன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் உறுப்பினர்களாக உள்ள ஒன்றரை லட்சம் உறுப்பினர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு மருத்துவர்கள். இந்த தேர்தலில் நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு மருத்துவர்கள்.

கடந்த பல ஆண்டுகளாக அரசியல் பின்னணி மற்றும் அரசியல் செல்வாக்கான சில அரசு மருத்துவர்கள் மட்டுமே நிர்வாகிகள் பதவிக்கு வந்துள்ளனர்.மருத்துவ கவுன்சில் தேர்தலில், வாக்காளர்களாக உள்ள அரசு மருத்துவர்களிடம் வாக்குச்சீட்டை பெறும் வேட்பாளர்கள், தங்கள் விருப்பம் போல் அதை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று தேர்தல்களில் இந்த நடைமுறை காரணமாக தகுதியான வேட்பாளர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். வாக்குச்சீட்டு நடைமுறை முழுமையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை. எனவே, ஜனவரி 19-ம் தேதி தேர்தல் நடத்துவது தொடர்பாக அக்டோபர் 19-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்