நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்து
ஊட்டி-தொட்டபெட்டா இடையே நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;
ஊட்டி
ஊட்டி-தொட்டபெட்டா இடையே நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கார் கவிழ்ந்தது
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம் உள்பட பல்வேறு இடங்களுக்கு வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து கல்லூரி மாணவர்கள் 5 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். அதன் பின்னர் அவர்கள் ஊட்டியில் இருந்து பைக்காரா சென்று படகு சவாரி செய்ய திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் காரில் ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் பைக்காரா நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட மாணவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனினும் கார் பலத்த சேதம் அடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதைத்தொடர்ந்து விபத்தை ேநரில் பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக பைக்காரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறை உதவியுடன் காரை மீட்டனர். மேலும் மாணவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றுக்கொண்டு கோவைக்கு திரும்பினர். மாணவர்கள் புகார் எதுவும் கொடுக்காததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.