தீப்பிடித்து எரிந்த கார்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தீப்பிடித்து எரிந்த கார்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் தருண்குமார் (வயது 30). இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை பெற தருண்குமார் தனது மனைவியை அழைத்துக் கொண்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்தார்.
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எம்.சி. காலனியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கினார்.
இந்தநிலையில் நேற்று காலை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சத்துவாச்சாரியில் உள்ள கடைக்கு தருண்குமார் காரில் சென்றார். கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்து கொண்டிருந்த போது காரின் பின்புறத்தில் இருந்து புகை வந்தது. இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்து காரை அங்கேயே நிறுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போது திடீரென கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
விசாரணை
இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் தீயில் எரிந்து நாசமானது.
மேலும் தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசாரும் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.