மரத்தில் கார் மோதியது; மூதாட்டி பலி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மரத்தில் மோதியது
சாத்தூர் அருகே படந்தால் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது37). இவர் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாய் மகேஸ்வரி (63), பாட்டி திருமலையம்மாள் (85) ஆகியோருடன் மாத்தூர் கருப்பசாமி கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர்கள், சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து உறவினரை பார்ப்பதற்காக ராஜபாளையத்திற்கு காரில் சென்றனர்.
அப்போது மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்ற போது மரத்தில் கார் மோதி விபத்து ஏற்பட்டது.
மூதாட்டி பலி
இதில் திருமலையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சதீஷ்குமார், மகேஸ்வரி, சீனிவாசன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் சதீஷ்குமார், மகேஸ்வரி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.