ரூ.12 லட்சம் செம்மர கட்டைகளுடன் வந்த கார் மரத்தில் மோதியதால் பரபரப்பு
நாட்டறம்பள்ளி அருகே போலீசார் சோதனையின்போது ரூ.12லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளுடன் சொகுசு கார் மரத்தில் மோதி நின்றது. இது தொடர்பாக தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஜோலார்பேட்டை,
நாட்டறம்பள்ளி அருகே போலீசார் சோதனையின்போது ரூ.12லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளுடன் சொகுசு கார் மரத்தில் மோதி நின்றது. இது தொடர்பாக தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரோந்துப்பணி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் சென்றாயசாமி கோவில் எதிரேயுள்ள கல்லியூர் தரகப்பனூர் வட்டம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதற்கு முன்பு மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் வந்ததால் சந்தேகத்தின்பேரில் போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர்.
அப்போது சொகுசுகாரை ஓட்டி வந்த டிரைவர் நிலைதடுமாறியதில் கார் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கி மரத்தின் மீது மோதி நின்றது.
உடனே காரில் இருந்து இறங்கி டிரைவர் தப்பி ஓடினார். போலீசார் அந்த காரை சோதனையிட்டதில் அதில் 8 செம்மரக்கட்டைகள் 260 கிலோ எடையில் இருந்தன.
இவற்றை ஆந்திரா மாநில பகுதியில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் என தெரிகிறது.
பின்னர் நாட்டறம்பள்ளி போலீசார் செம்மர கட்டைகளுடன் மரத்தில் மோதி நின்ற சொகுசு காரை பள்ளத்தில் இறங்கி மற்றொரு வாகனம் மூலம் கட்டி இழுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை
தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், வாணியம்பாடி வனத்துறை அலுவலர் இளங்கோ மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை காருடன் வாணியம்பாடி வனத்துறை அலுவலர் இளங்கோவிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரையும் மோட்டார்சைக்கிளில் நிற்காமல் சென்ற மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.