அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும்
பாண்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாண்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் அதன் அவைக் கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
சிவக்குமார் (தி.மு.க.): மாப்படுகை ஊராட்சியில் சமுதாயக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடம் ஆகியவை பழுதடைந்த நிலையில் மோசமாக உள்ளது. இதனை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காந்தி (தி.மு.க.): காளி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் கழிவறையை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் அனுமதிப்பதில்லை. 100 நாள் வேலைஅட்டை பல பேருக்கு இன்னும் கிடைக்கவில்லை. 1986-ம் ஆண்டு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மிகவும் மோசமாக உள்ளது.
புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்
அர்ஜுன் (தி.மு.க.): குளிச்சா ஊராட்சி அரும்பூர் கிராமத்தில் சுடுகாடு சாலை மிக மோசமாக இருப்பதால் வயலில் இறந்தவர்களின் உடலை தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
சக்திவேல் (பா.ம.க.): பாண்டூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடிக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டும். ஊராட்சி பள்ளியில் கழிவறை இல்லை.
ராஜேந்திரன் (தி.மு.க.): மண்ணப்பந்தல் ஊராட்சியிலும் அங்கன்வாடி வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
கலைவாணிசங்கர் (அ.தி.மு.க.): பி.எம்.ஜி.எஸ்.ஒய்.திட்டத்தின் கீழ் அ.தி.மு.க. ஆட்சியின்போது மணக்குடி- மன்னம்பந்தல் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் காவிரியின் குறுக்கே புதிய பாலம் கட்டி தார்சாலை அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. தற்போது ரூ.4 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விடப்பட்டு 2 மாதங்களை கடந்தும் இதுவரை பணி தொடங்கப்படவில்லை. அந்த சாலை அமைக்கும் பணி தொடங்கப்படாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை
ஆணையர்: மயிலாடுதுறை ஒன்றியத்தில் உள்ள 24 ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களில் 2 கட்டிடங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து தகவல் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொண்டு புதிய கட்டிடம் கட்டித்தரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா நன்றி கூறினார்.