நெடார் வெட்டாற்றில் செடி, கொடி வளர்ந்து காணப்படும் பாலம்

நெடார் வெட்டாற்றில் செடி, கொடி வளர்ந்து பாலம் காணப்படுகிறது

Update: 2023-06-23 19:52 GMT

தஞ்சை-கும்பகோணம் பிரதான சாலை நெடார் வெட்டாற்றில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படும் பாலம் மற்றும் குண்டும், குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

நெடார் பகுதி

தஞ்சை-கும்பகோணம் பிரதான சாலையில் நெடார் பகுதி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணத்தில் பழமைமிக்க பல்வேறு கோவில்கள், பிரதான சின்னங்கள், நவக்கிரக வழிபாட்டு தலங்கள் உள்ளன.

இதனால் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் நெடார் வழியாக கும்பகோணத்துக்கு வந்து செல்கின்றனர். இவர்கள் செல்வதற்கு முக்கிய வழித்தடமாக நெடார் பகுதி உள்ளது.

வெட்டாற்றில் பாலம்

எனவே, போக்குவரத்து வசதிக்காக நெடார் பகுதி வெட்டாற்றில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா வருபவர்கள் நெடார் வெட்டாற்று பாலம் வழியாக விரைவாக கும்பகோணம் சென்று வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வெட்டாற்றில் உள்ள பாலம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது.

இதனால் பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடி, கொடிகள் வளர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், பக்கவாட்டு தடும்புகளும் உடைந்து காணப்படுகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

இதுகுறித்து நெடார் பகுதியை சேர்ந்த வியாபாரி குமார் கூறுகையில், இந்த பாலம் கட்டப்பட்டு 53 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். தற்போது பாலம் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலம் சீரமைக்கப்படும் என பாலத்தில் உள்ள சாலையை பொக்லின் எந்திரம் மூலம் உடைந்தனர்.

ஆனால் பணி தொடங்கிய வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதனால் தற்போது சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தையும், சாலையையும் சீர் செய்து தர வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்