நீர்வரத்து பாதையில் பாலம் அமைக்க வேண்டும்
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி-ஆண்டியாபுரம் இடையே உள்ள நீர்வரத்து பாதையில் சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி-ஆண்டியாபுரம் இடையே உள்ள நீர்வரத்து பாதையில் சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட அனுப்பன்குளம் பஞ்சாயத்தில் ஆண்டியாபுரம் உள்ளது. இந்த கிராமத்தில் 700 பேர் வசித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதில் பெரும்பாலான மாணவ, மாணவிகள் வெளியூர்களில் சைக்கிளிலும், நடந்தும் வந்து செல்கின்றனர். சிவகாசி-சாத்தூர் ரோட்டில் மீனம்பட்டியில் இருந்து ஆண்டியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 1 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த பாதை தற்போது மண் சாலையாக இருக்கிறது. மழைக்காலங்களில் இந்த பாதையில் செல்ல முடியாது. இந்த பாதை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
கூடுதலாக 5 கி.மீ. தூரம்
மேலும் கடும் மழை பெய்யும் போது இந்த பகுதியையொட்டி செல்லும் நீர்வரத்து கால்வாயில் தண்ணீர் அதிகமாக செல்லும். இந்த தண்ணீர் அனுப்பன்குளம் கண்மாய்க்கு செல்லும். இது போன்ற காலங்களில் 2 மாதங்களுக்கு மேல் இந்த பகுதியை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதுபோன்ற காலங்களில் இந்த கிராமத்துக்கு செல்ல பொதுமக்கள் அனுப்பன்குளம் சென்று பின்னர் அங்கிருந்து ஆண்டியாபுரம் செல்ல வேண்டி நிலை உள்ளது. இதனால் கூடுதலாக 4 கிலோ மீட்டர் என மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆதலால் இங்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம் அமைக்க நடவடிக்கை
இதுகுறித்து யூனியன் கவுன்சிலர் அன்பரசு கூறியதாவது, பொது மக்கள் மற்றும் மாணவர்கள் மழைக்காலங்களில் நீரோடையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து யூனியன் தலைவர் மற்றும் துணைத்தலைவர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
விரைவில் நேரில் வந்து பார்த்து பாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாக யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். எனவே மாவட்ட நிர்வாகம் இங்கு சிறுபாலம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.