குடியிருப்பில் கருஞ்சிறுத்தை உலா
கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை உலா வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.;
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, கருஞ்சிறுத்தை, சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு கருஞ்சிறுத்தை அந்த சாலை வழியாக நடமாடியது. பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. கருஞ்சிறுத்தை செல்வதை கண்டு, அங்குள்ள வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தது. அப்போது வீட்டின் உரிமையாளர், தனது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போது, அதில் கருஞ்சிறுத்தை சாலையில் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.