தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் தாகத்தை தீர்க்க தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

Update: 2022-12-17 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கர்நாடக மாநிலம் நந்தி கேசவ மலை அடிவார பகுதிகளில் இருந்து தென்பெண்ணை ஆறு இரண்டாக பிரிந்து வேலூர் பகுதியில் வட பெண்ணை பாலாறாகவும், கிருஷ்ணகிரி பகுதியில் தென்பெண்ணை ஆறாகவும் பாய்ந்தோடுகிறது. இதில் தென்பெண்ணையாற்று தண்ணீர் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு வழியாக பயணித்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடந்து கடலுக்கு செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீர் பல்லாயிரக்கணக்கான மக்களின் தாகத்தை தணித்து வருவது மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.

கிருஷ்ணகிரியில் இருந்து வரும் தென்பெண்ணையாற்று நீரை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் இருக்கும் சாத்தனூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு, கோடை காலங்களில் விவசாய பயன்பாட்டுக்காக திறந்து விடும் நடைமுறை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதோடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்த்தும் வருகிறது.

பருவமழை காலங்களில் கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை நிரம்பியவுடன் உபரிநீர் தென் பெண்ணையாற்றில் திறந்து விடப்படும். அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக பயணித்து வீணாக கடலில் கலந்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

குறிப்பாக மூங்கில்துறைப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து விவசாயத்துக்கும், கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்களின் கருத்து விவரம் வருமாறு:-

பழையூரை சேர்ந்த கணேசன்:- தென்பெண்ணை ஆறு எங்கள் பகுதிக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது நெற்யிரை சாகுபடி செய்வோம், மாற்று பயிராக கரும்பும் பயிரிடுவோம். வறட்சி இல்லாத காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் வரும் தண்ணீரும்,கிணற்று தண்ணீரும் நாங்கள் விவசாயம் செய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் தடுப்பணை இல்லாததால் மழைக்காலங்களில் ஆற்றில் வரும் தண்ணீர் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் கடலில் சென்று கலந்து வீணாகி வருகிறது. எனவே இப்பகுதி விவசாயிகளாகிய நாங்கள் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு தடுப்பணை கட்டினால் விவசாயம் செழிக்கும்,மேலும் குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்றார்.

மூங்கில்துறைப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதி திருமலை:- மூங்கில்துறைப்பட்டு விவசாயம் சார்ந்த மிக முக்கிய பகுதி என்பதால் இங்குள்ள தென்பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை என்பது மிகவும் அவசிய தேவையாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மழை இல்லாத காரணத்தினால் ஆறு முழுவதும் வறண்ட நிலையில் காணப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. எனவே இந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மூங்கில்துறைப்பட்டை மையமாக கொண்டு தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும். அப்படி செய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வது மட்டுமின்றி விவசாயமும் செழித்து வளரும் என்றார்.

மேலந்தல் கிராமம் விவசாயி துரைராஜ்:- நாங்கள் பெரும்பாலும் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம். ஆனால் சில நேரங்களில் கடும் வறட்சியையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்தாலும் வறட்சி காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் மழைக்காலங்களில் தென்பெண்ணையாற்றில் பாய்ந்தோடும் தண்ணீர் எந்த பயனும் இல்லாமல் கடலில் கலந்து வீணாவது வேதனையாக உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீரை சேமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்