அயப்பாக்கம் அருகே மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை சாவு

அயப்பாக்கம் அருகே மர்ம காய்ச்சலால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2023-10-21 06:45 GMT

ஆவடி அடுத்த அயப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சிவச்சந்திரன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவி திலகவதி. இவர்களுக்கு 2 வயதில் யஸ்விதா என்ற ஒரே ஒரு மகள் இருந்தாள். யஸ்விதாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதும் சற்று காய்ச்சல் குறைந்தது.

அதன்பிறகு 2 தினங்களுக்கு முன்பு மீண்டும் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அம்பத்தூரில் உள்ள ஓமியோபதி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ததில் டைபாய்டு காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு குழந்தைக்கு ஓமியோபதி மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

நேற்று முன்தினம் இரவு குழந்தையின் தாய் திலகவதி எழுந்து பார்த்தபோது குழந்தை அசைவில்லாமல் படுத்திருந்ததாக தெரிகிறது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக குழந்தையை அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை யஸ்விதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்