வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழப்பு..!
வாணியம்பாடி அருகே தனியார் கிளினிக்கில் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் உயிரிழந்தான்.
வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஜொடாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 13) அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று சூரிய பிரகாஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டது இதற்காக நாயனசெருவு பகுதியில் கிளினிக் நடத்தி வரும் கோபி என்பவரிடம் சிகிச்சை அளித்தனர். அப்போது கோபிநாத் மாணவனுக்கு தவறுதலாக ஊசி போட்டதாக கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்றதும் சிறுவன் சூரிய பிரகாசுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே நாட்றம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் சிறுவனின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஊசி போடப்பட்டது குறித்து விசாரித்தனர். அப்போது கோபிநாத் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர் கோபிநாத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலி கிளினிக் நடத்துவது குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.