ரெயில் முன் பாய்ந்து குமரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
பாறசாலையில் ரெயில் முன் பாய்ந்து குமரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
களியக்காவிளை:
பாறசாலையில் ரெயில் முன் பாய்ந்து குமரியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவி பிணம்
கேரள மாநிலம் பாறசாலை ரெயில் நிலையத்தை அடுத்த பரிசுவைக்கல் பகுதியிலுள்ள ரெயில்வே பாலத்தின் அடியிலுள்ள ரெயில் தண்டவாளத்தில் நேற்று பள்ளி சீருடையில் மாணவி ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பாறசாலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த மாணவியின் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், நான் இறந்து போனால் இந்த செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் என்று எழுதப்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு போலீசார் பேசிய போது இறந்து கிடந்த மாணவி கொல்லங்கோடு அருகே உள்ள சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரது மகள் ஈவ்லிங் ஜோய் ( வயது 15) என தெரிய வந்தது. உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் காலையில் நெல்லையிலிருந்து திருவனந்தபுரம் வழியாக ஜாம்நகர் செல்லும் ரெயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்தது தெரிய வந்தது,
காரணம் என்ன?
ஈவ்லிங் ஜோய் தந்தை சுரேஷ் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தாயார் அக்ஷய், அண்ணன் பென் (17) என்பவருடன் களியக்காவிளை அருகேயுள்ள தையாலுமூடு பகுதியில் தற்போது வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
பென் பளுகல் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பும், ஈவ்லிங் ஜோய் அதே பள்ளியில் 10 - ம் வகுப்பும் படித்து வந்தார். அண்ணன்-தங்கை இருவரும் இந்த ஆண்டு தான் புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலையில் சிறப்பு வகுப்பு உள்ளதாக வீட்டில் கூறிவிட்டு ஈவ்லிங் ஜோய் தனியாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஈவ்லிங் ஜோய் தற்கொலை செய்துள்ளார். அவர் எப்படி அங்கு சென்றார்? எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரேஷ் இதற்கு முன்பு கொல்லங்கோட்டில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். தற்போது அங்கிருந்து தையாலு மூடு பகுதிக்கு வந்து வசித்து வருகிறார். மேலும் பள்ளியையும் மாற்றி உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஈவ்லிங் ஜோய் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் பாறசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.