பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி: 10-ம் வகுப்பில் 90 சதவீதம் பேர் தேர்வானதாக அறிவிப்பு

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேரும், 10-ம் வகுப்பில் 90 சதவீதம் பேரும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-06-21 00:23 GMT

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த2 ஆண்டுகளாக பள்ளிகள் முறையாக செயல்படவில்லை. இதனால் பொதுத்தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

பொதுத்தேர்வு முடிவு வெளியீடு

ஆனால் கடந்த கல்வி ஆண்டில் (2021-22) ஓரளவு வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வுகளுக்கான முடிவு நேற்று வெளியாகின. வழக்கமாக 10-ம் வகுப்புக்கு ஒரு நாளும், பிளஸ்-2 வகுப்புக்கு மற்றொரு நாளும்தான் தேர்வு முடிவு வெளியிடப்படும். ஆனால் நேற்று ஒரே நாளில் 2 பொதுத்தேர்வு முடிவுகளையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் வெளியிட்டார்.

அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 17 லட்சத்து 18 ஆயிரத்து 897 பேர் எழுதிய தேர்வு முடிவு வெளியாகி உள்ளன. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத பதிவு செய்து இருந்தனர். அவர்களில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகளும் என மொத்தம் 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர் தேர்வு எழுதினார்கள். அந்த வகையில் 31 ஆயிரத்து 44 பேர் தேர்வை எழுதவில்லை.

93.76 சதவீதம் பேர் தேர்ச்சி

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவிகள் 4 லட்சத்து 6 ஆயிரத்து 105 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 893 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 93.76 ஆகும்.

இதுதவிர, 25 ஆயிரத்து 887 தனித்தேர்வர்களும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதியிருக்கின்றனர். அதேபோல், 3 ஆயிரத்து 95 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில், 2 ஆயிரத்து 824 பேரும், சிறைவாசிகள் 74 பேர் எழுதியதில் 71 பேரும் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது தேர்ச்சி சதவீதம் சற்று அதிகரித்து இருப்பதையே பார்க்க முடிகிறது. அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டில் 91.1 சதவீதமும், 2019-ம் ஆண்டில் 91.3 சதவீதமும், 2020-ம் ஆண்டில் 89.4 சதவீதமும், 2021-ம் ஆண்டில் 100 சதவீதமும் (கொரோனாவால் அனைவரும் தேர்ச்சி), தற்போது 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

591-க்கு மேல் 656 பேர்

பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 95.51 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.51 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 85.13 சதவீதமும், தொழிற்பாடப்பிரிவுகளில் 84.26 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மொத்தம் 600 மதிப்பெண்ணுக்கு 591 மதிப்பெண்ணுக்கு மேல் 656 பேரும், 581 முதல் 590 வரை 3 ஆயிரத்து 826 பேரும், 571 முதல் 580 வரை 6 ஆயிரத்து 674 பேரும், 551 முதல் 570 வரையில் 18 ஆயிரத்து 977 பேரும், 501 முதல் 550 வரை 72 ஆயிரத்து 795 பேரும், 451 முதல் 500 வரை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 914 பேரும், 401 முதல் 450 வரை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 820 பேரும், 351 முதல் 400 வரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 647 பேரும், 301 முதல் 350 வரை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 678 பேரும், 300-க்கு கீழ் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 290 பேரும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

10-ம் வகுப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரையில், 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 42 ஆயிரத்து 519 பேர் தேர்வு எழுதவில்லை.

தேர்வு எழுதியவர்களில், 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 மாணவர்கள், 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதில் மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 90.1 ஆகும்.

இதுதவிர தனித்தேர்வர்களாக 28 ஆயிரத்து 233 பேர் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி உள்ளனர். மேலும் 6 ஆயிரத்து 16 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில், 5 ஆயிரத்து 424 பேரும், சிறைவாசிகளாக 242 பேர் எழுதியதில் 133 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் சரிவு

10-ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் 94.5 சதவீதமும், 2019-ம் ஆண்டில் 95.2 சதவீதமும், 2020 மற்றும் 2021-ம் ஆண்டில் (தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டது) 100 சதவீதமும், தற்போது 90.1 சதவீதமும் தேர்ச்சி பதிவாகியிருக்கிறது.

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 5.1 சதவீதம் என கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால், கற்றல் இழப்பு ஏற்பட்டு, நேரடியாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எதிர்கொண்டதையும், கணிதம் பாட வினாத்தாள் கடினமாக அமைந்ததையும்தான் கூறுகிறார்கள்.

பாடவாரியான தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, தமிழ் 94.84 சதவீதமும், ஆங்கிலம் 96.18 சதவீதமும், கணிதம் 90.89 சதவீதமும், அறிவியல் 93.67 சதவீதமும், சமூக அறிவியல் 91.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது.

இதில் 495 மதிப்பெண்ணுக்கு மேல் 65 பேரும், 491 முதல் 495 வரை 564 பேரும், 481 முதல் 490 வரை 3 ஆயிரத்து 839 பேரும், 401 முதல் 480 வரை 1 லட்சத்து 11 ஆயிரத்து 583 பேரும், 351 முதல் 400 வரை 1 லட்சத்து 19 ஆயிரத்து 997 பேரும், 301 முதல் 350 வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 668 பேரும், 300-க்கு கீழ் 5 லட்சத்து 20 ஆயிரத்து 904 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்