கறிக்கோழி விலை தொடர் சரிவு: பண்ணையாளர்களுக்கு ரூ.900 கோடி நஷ்டம்
கறிக்கோழி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், கடந்த 2 மாதங்களில் மட்டும் பண்ணையாளர்களுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
நாமக்கல்:
விலை சரிவு
நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், பல்லடம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. சமீபகாலமாக கறிக்கோழிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் பண்ணையாளர்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று முன்தினம் கிலோ ரூ.87-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலை நேற்று கிலோவுக்கு ரூ.15 குறைந்தது.
இந்த விலை சரிவு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்லைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
தற்போது தொடர்மழை காரணமாக கறிக்கோழி உற்பத்தி அதிகரித்து உள்ளது. வழக்கமாக 42 நாட்களில் கோழிகள் எடை அதிகரிக்கும். ஆனால் தற்போது 38 நாட்களில் எடை அதிகரித்து விடுகிறது. அதாவது 2 கிலோ என்ற அளவில் எடை இருந்த நிலையில், தற்போது 2½ கிலோ வரை அதிகரித்துள்ளது. மேலும் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்களான சோயா 100 சதவீதமும், மக்காச்சோளம், ஆயில், புண்ணாக்கு, தவிடு, மருந்துகள் 40 சதவீதமும் விலை உயர்ந்து உள்ளது.
ரூ.900 கோடி நஷ்டம்
இதன் காரணமாக கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செலவு ரூ.100-க்கு மேல் உயர்ந்து உள்ளது. ஆனால், கொள்முதல் விலை குறைவாக உள்ளது. தற்போது 15 சதவீதம் உற்பத்தி அதிகரித்து உள்ளதால், வாரம் 2½ கோடி கிலோ கறிக்கோழி உற்பத்தியாகிறது.
கடந்த 2 மாதமாக உற்பத்தி செலவை காட்டிலும் கொள்முதல் விலை குறைத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் தமிழக பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த இழப்பில் இருந்து பண்ணையாளர்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கோழிகளுக்கான தீவன மூலப்பொருட்களை இறக்குமதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.