ஊட்டி கோர்ட்டில் சயான் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு, ஊட்டி கோர்ட்டில் சயான் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த மாதம் 21-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2023-02-24 18:45 GMT

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு, ஊட்டி கோர்ட்டில் சயான் உள்பட 9 பேர் ஆஜராகவில்லை. இதனால் அடுத்த மாதம் 21-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கேரளாவை சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பிறகு கோடநாடு வழக்கு விசாரணை அவ்வபோது சூடுபிடித்து வருகிறது. முன்னதாக போலீஸ் ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆகியோரிடமும் விசாரணை நடந்தது.

இதற்கிடையில் கோடநாடு வழக்கு, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் சூப்பிரண்டு முருகவேல், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு, தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விசாரணை ஒத்திவைப்பு

இந்த நிலையில் கோடநாடு வழக்கு, நேற்று ஊட்டி கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் சூப்பிரண்டு முருகவேல், துணை சூப்பிரண்டுகள் சந்திரசேகர், அண்ணாதுரை ஆகியோர் ஆஜராகினர். குற்றவாளிகள் தரப்பில் வாளையாறு மனோஜ் மட்டும் ஆஜராகினார். தொடர்ந்து அடுத்த மாதம்(மார்ச்) 21-ந் தேதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

பின்னர் வக்கீல் ஷாஜகான் கூறுகையில், செல்போன் தகவல் பரிமாற்றங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவை வருவதற்கு காலதாமதம் ஆகி வருகிறது. மின்னணு ஆதாரம் சேகரிக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தனிப்படையினர் சென்று வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 48 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்