பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 9 பேர் கைது
மீன்சுருட்டி அருகே பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தகராறு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நெல்லி தோப்பு கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கோடாலி கருப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் (வயது 42) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை குண்டவெளி காலனி தெருவை சேர்ந்த பிரதீப் (20), பிரசாத் (20) ஆகியோர் தங்களது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுள்ளனர். அதற்கு குணசேகரன் பணம் கேட்டதற்கு பிரதீப் கூகுள் பேயில் பணம் அனுப்பியதாக கூறியுள்ளார். ஆனால் குணசேகரன் பணம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
9 பேர் கைது
அப்போது சொக்கலிங்கபுரம் மெயின் ரோடு தெருவை சேர்ந்த கலையரசன் (40), திலகர் (45) ஆகியோர் என்ன பிரச்சினை என்று கேட்டுள்ளனர். அதற்கு பிரதீப், பிரசாத் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தங்களது உறவினர்களுக்கு போன் செய்து ஜெயசீலன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வரவழைத்தனர். பின்னர் அவர்கள் குணசேகரன், திலகரை தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து குணசேகரன், கலையரசன், திலகர் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப், பிரசாத், விஜேந்திரன் (20), ராஜ்குமார் (20) உள்பட 9 பேரை கைது செய்தனர்.