ரூ.9 கோடியில் 892 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
ரூ.9 கோடியில் 892 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க விழா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, துறைமங்கலம் சாலையில் உள்ள ஒரு திருமண மகாலில் நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கற்பகம் முன்னிலை வகித்தார்.
விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு ரூ.9 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் 892 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த சாதனை விளக்க மலரை அவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
பல்வேறு திட்டங்கள்
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். அரசு பஸ்களில் மகளிர் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தின் கீழ் இதுவரை பெண்கள் சுமார் 280 கோடி பயணங்கள் செய்துள்ளனர். தேர்தல் நேரத்தில் அறிவிக்காத வாக்குறுதியாக பெண்கள் கல்லூரி படிப்பினை தொடர வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
செப்டம்பர் 15-ந் தேதி முதல் மாதம் ஆயிரம் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் எறையூர் கிராமத்திற்கு நேரடியாக வந்து தொழில் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் அறிவித்தது மட்டுமின்றி, அவற்றை செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.