விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
திருக்கடையூர் அருகே விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே விளைநிலங்களில் கடல்நீர் புகுந்ததால் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடல்நீர் உட்புகுந்தது
மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சின்னங்குடி பகுதியில் உள்ள குமாரகுடி, சின்னமேடு, மருதம்பள்ளம், சங்கேந்தி, வடகட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சம்பா சாகுபடிக்காக நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த பகுதிகளுக்கு சின்னங்குடி சேவனாறு வாய்க்கால் வடிகாலாக விளங்குகிறது. தற்போது இந்த வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகரித்து கடல் நீர் விளைநிலங்களில் உட்புகுந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
800 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னங்குடி சேவணாறு வடகால் வாய்க்காலில் கடல் நீர் உட்புகுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் 800 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.சம்பா சாகுபடி செய்யப்பட்டு நாற்றுகள் நல்ல வளர்ந்த நிலையில், தற்போது பெய்த மழையினால் வடிகால் வாய்க்காலில் இருந்து கடல் நீர் புகுந்து வயல்கள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
தடுப்பணை கட்ட வேண்டும்
எனவே அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளை பார்வையிட்டு கடல் நீர் உட்புகாமல் இருக்க தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.