தூத்துக்குடியில் 490 பவுன் நகை மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது
தூத்துக்குடியில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் தருவதாக கூறி 490 பவுன் நகை மோசடி செய்த வழக்கில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவரை அதே பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி கிரேனா (40), சுந்தரலிங்கம் மனைவி ஜெயலட்சுமி (40), செல்லத்துரை மகன் பாக்கியராஜ் (25) ஆகிய 3 பேரும் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது அவர்கள், தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து அந்த பணத்தை பங்குச்சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாகவும், 10 பவுன் நகை கொடுத்தால் 10 நாட்களில் நகையுடன் ரூ.10 ஆயிரம் சேர்த்து திருப்பி கொடுப்பதாகவும், 35 பவுன் நகை கொடுத்தால் கார் வாங்க முன்பணம் செலுத்துவதாகவும் கூறினர்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இதனை உண்மை என்று நம்பிய மதன்குமார் கடந்த 6.5.2023 அன்று 35 பவுன் தங்க நகைகளையும், கடந்த 9.5.2023 அன்று தனது உறவினர்களிடமிருந்து மேலும் 50 பவுன் தங்க நகைகளையும் வாங்கி கொடுத்து உள்ளார். இதில் மதன்குமாருக்கு ரூ.40 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளனர். கார் வாங்க எந்த முன்பணமும் செலுத்தவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மதன்குமார், கிரேனா வீட்டுக்கு சென்று கேட்டு உள்ளார். அப்போது கிரேனா உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து மதன்குமாரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர். ஏமாற்றப்பட்டதை அறிந்த மதன்குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளித்தார்.
490 பவுன் நகைகள் மோசடி
இதுதொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கிரேனா, ஜெயலட்சுமி, பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 69 பவுன் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் கைதான கிரேனா உள்ளிட்ட 3 பேரும் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 30 பேரிடம் இதேபோன்று 490 பவுன் நகைகளை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் 8 பேர் கைது
இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த சந்தியா (24), வடக்கு பரும்பூரைச் சேர்ந்த மாரிச்செல்வம் (29), தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகரை சேர்ந்த தங்ககுமார் (31), புதியம்புத்தூரைச் சேர்ந்த கிஷோர் ராகுல் (23), நடுவக்குறிச்சியை சேர்ந்த பட்டு மாரியப்பன் (31), சுந்தர விநாயகம் (23), ராஜலெட்சுமி (27), ராஜ்குமார் (42) ஆகிய 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.